பீஜிங்

சீனாவில் கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்ததால் மூன்றாம் கட்ட சோதனை தொடங்க உள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப் பல உலகநாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.   இதில் ரஷ்யா தாங்கள் கண்டு பிடித்துள்ள தடுப்பூசி அனைத்துச் சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.   மேலும் பல நாடுகளில் மனித சோதனை நடைபெற்று வருகிறது.

சீனாவில் உள்ள சினோஃபார்ம் என்னும் மருத்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளை முடித்துள்ளது.  அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட 320 பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளதால் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சீனாவில் தற்போது சோதனைக்கு உட்படுத்த அதிகம் பேர் இல்லாததால் சீன நிறுவனமான சினோஃபார்ம் தனது மூன்றாம் கட்ட சோதனையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த உள்ளது.   மூன்றாம் கட்ட சோதனையில் சுமார் 15000 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தங்கள் சோதனையில் தேர்ச்சி பெறும் தடுப்பூசி  அமெரிக்க மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.