பிளாட்பாரத்திலேயே நிற்காதீர்கள், போன ரயில் திரும்பி வராது: இந்தியாவுக்கு உகாண்டா அமைச்சர் அறிவுரை

அகமதாபாத்:

ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் கை ஓங்கியுள்ளது. அந்த வாய்ப்பை தவறவிட்டதற்கு இந்தியா நொண்டிச் சாக்கு சாக்கு சொல்லாமல், மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என உகாண்டா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்ட்ரி ஓகேலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


குஜராத்தில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் நடைபெற்ற ‘ஆப்பிரிக்க தின’ த்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “ஆப்பிரிக்காவில் சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு நொண்டிச் சாக்குப் போக்கையும், புகாரையும் இந்தியா கூறிக் கொண்டிருக்கிறது. உகாண்டாவில் ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணியை இந்தியர்கள் நழுவவிட்டனர். அதை சீனா பயன்படுத்திக் கொண்டது.

முதலில் வந்தது இந்தியாதான். ஆனால் அழகிய வாய்ப்பை நழுவவிட்டார்கள்.

இந்தியர்கள் மீண்டும் எங்கள் நாட்டுக்கு வந்து, அவர்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். ஆப்பிரிக்காவில் சீனா இருப்பதை சர்வதேச சமுதாயம் குற்றஞ்சாட்டுவதை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றேன்.

இதேபோன்றுதான், சீனா வருவதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் பணிகளை செய்த இந்தியாவை குற்றஞ்சாட்டினார்கள். நீங்கள் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தால், போன ரயில் திரும்பி வராது.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் முன்னர் இருந்த  செல்வாக்கை இந்தியா மீட்டெடுக்க வேண்டும். உகாண்டாவில் தங்கள் சொத்துக்களை இழந்த இந்தியர்கள் திரும்பி வந்தால், உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் இருந்தனர்.