இந்தியாவுக்குப் பாகிஸ்தானை விடச் சீனா மிகப் பெரிய அச்சுறுத்தல் : சரத்பவார்

மும்பை

ந்தியாவுக்குப் பாகிஸ்தானை விடச் சீனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாகப் பல பிரச்சினைகள் நிலவி வருகின்றன.   குறிப்பாகக் காஷ்மீர் மாநிலம் குறித்து இரு நாடுகளுக்கு இடையே கருத்து மோதல், பயங்கரவாத ஊடுருவல்,   பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் எனப் பலவிதங்களிலும் இந்தியா தொல்லைகளைச் சந்தித்து வருகிறது.   குறிப்பாகக் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபகாலமாகச் சீனாவும் இந்தியாவுக்கு தொல்லைகள் அளித்து வருகின்றது.   லடாக் எல்லைப்பகுதியில் படைகள் குவிப்பு,  எல்லை தாண்டிய தாக்குதல் ஆகியவை அப்பகுதியில் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.   அது மட்டுமின்றி நேபாளம் போன்ற அண்டை நாடுகளை தன் வசம் இழுத்து இந்தியாவுக்கு மேலும் மேலும் சீனா தொல்லை அளித்து வருகிறது.

தேசிய வாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான சரத்பவார், “நமக்கு எதிரி என்னும் எண்ணம் எழுந்ததும் முதலில் நம் மனதில் வரும பெயர் பாகிஸ்தான் ஆகும்.  ஆயினும் நாம் பாகிஸ்தானைப் பற்றி அதிக அளவுக்கு கவலைப்படத் தேவை இல்லை.   ஆனால் சீனாவைப் பற்றி அப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது.

சீனாவின் பலம், திட்டம் செயல் ஆகியவை நீண்ட காலமாகவே இந்தியாவின் நலனுக்கு எதிராகவே உள்ளன.   சீனா இந்தியாவுக்குப் பாகிஸ்தானை விட மிகப் பெரிய அச்சுறுத்துலாக விளங்கி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை நட்புணர்வு மூலம் தீர்க்க முடியாது.  இந்தியா பொருளாதார வலிமை பெறுவதில் சீனா பெரிய சவாலாக விளங்கும்.

சீன விவகாரத்தில் எவ்வித அரசியலும் இருக்கக் கூடாது என நான் விரும்புகிறேன்.  சீனாவை நிச்சயமாக நம்மால் எதிர்க முடியும்.   ஆயினும் அவர்களுடைய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் போது ஒட்டு மொத்த நாடும் நல்ல விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.  சீனாவின்மீது சர்வதேச அழுத்தம் அளிக்க வேண்டியது அவசியமாகும்.”  எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி