கைலாஷ் சென்ற இந்திய பயணிகளை திருப்பி அனுப்பியது சீனா

 

காங்டாக்:

கைலாஷ் தரிசனத்துக்குச் சென்ற இந்திய பயணிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது.

இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியும் இந்துக்களுக்கு புதின தலங்கள் ஆகும். இவை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இவற்றை தரிசிக்க இந்தியாவில் இருந்து இந்துக்கள் சீன அரசின் அனுமதியுடன் சென்று தரிசிப்பார்கள்.
இந்த நிலையில், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய ஆன்மிக பயணிகள் 47 பேர், கடந்த 19-ம் தேதி சீன எல்லையை கடந்து செல்ல இருந்தனர். ஆனால் அவர்களை மேற்கொண்டு பயணத்தை தொடர விடாமல் சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திரும்ப அனுப்பி விட்டனர்.

மழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து இருப்பதால்தான், இந்திய ஆன்மிக பயணிகளை தடுத்து நிறுத்தி விட்டதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர். வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, சாலை நிலை மேம்பட்டவுடன் சீனா வழியாக இந்திய ஆன்மிகப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கூறுகையில், “நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இது பற்றி சீனாவிடம் மத்திய அரசு தெரிவிக்கும்” என்று தெரிவித்தார்.