Random image

ஆன்லைனில் மத செயல்பாடுகளுக்கு சீனா கடிவாளம்….புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

பெய்ஜிங்:

தொடர் மத மோதல் காரணமாக ஆன்லைனில் மத செயல்பாடுகளுக்கு சீனா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இன்டர்நெட்டில் சர்ச், மசூதி உள்ளிட்ட இதர மத அமைப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை சீனா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நேற்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத விவகார நிர்வாக துறை இதை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் தேவைப்படுவோர் தங்களது பெயருடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் எத்தகைய தகவல்களை வெளியிட வேண்டும் என்று அதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசின் மத ரீதியிலான கொள்கைகளை விமர்சனம் செய்யவும், சிறுவர்கள் மத்தியில் மதத்தை ஊக்குவிப்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சமீப கால மத ரீதியிலான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் சிலுவைகள் சேதப்படுத்துதல், பைபிள்களை எரித்தல், சர்ச்கள் மூடல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.