பீஜிங்

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சியை கேட்பவர்களுக்கு இயற்கைக்கு மாறாக வேகமாக இதயம் துடிப்பதாக கூறி, அவரது இசை நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது சீனா.

கனடாவை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் ( வயது 23).  இளம்  வயதிலேயே பாப் உலகில் டாப் ஸ்டாராக திகழ்கிறார்.  உலகம் முழுவதும்  இசை நிகழ்ச்சி நடத்திய அவர், சீனாவிலும் இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் சீனாவில் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரினார். ஆனால் இவர் இசை நிகழ்ச்சி நடத்த சீன அரசு அனுமதி அளிக்கவில்லை.

இது குறித்து சீனாவின் பெய்ஜிங் நகராட்சி கலாசார மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ஜஸ்டின் பீபர் நம்பிக்கைக்குரிய மனிதராக  இல்லை. கடந்த முறை சீனாவில் இசை நிகழ்ச்சி நடத்திய போது அவரது நடவடிக்கைகள் கெட்ட நடத்தையுடன் இருந்தன. எனவே அவர் மக்கள் விரும்பும் வகையில் பாடல் வரிகளை உருவாக்கி தன்னை மேம்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுக்கப்படுவதற்கு சீனா கூறும் இன்னொரு முக்கிய காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. “ஜஸ்டின்  இசை நிகழ்ச்சியில் தங்களது இதயம் இயற்கைக்கு மாறாக வேகமாக துடித்ததாகவும், மீண்டும் சீனாவில் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டாம் என்றும்  அரசு இணையதளத்தில் ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்” என்கிறது அந்த அறிக்கை.

கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி கோவிலில் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி நடத்தினார்.  இரண்டாம்  உலகப் போரில் பலியான லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சி இருந்தது.  இந்த இசை நிகழ்ச்சிக்கு பிறகு ஜஸ்டின்  குறித்து பல்வேறு சர்ச்சைகள் சீனாவில்  ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.