பாகிஸ்தானுக்காக இரு செயற்கைக் கோள்களை சீனா ஏவியது
பீஜிங்
பாகிஸ்தானின் பயன்பாடுக்காக இரு செயற்கைக் கோள்களை சீனா விண்ணில் ஏவி உள்ளது.
சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன. ஏற்கனவே ஐரோப்பா வரை சாலை அமைக்க உள்ள திட்டத்துக்கு சீனாவுக்கு முதலில் ஒப்புதல் வழங்கிய நாடு பாகிஸ்தான் ஆகும். அது மட்டுமின்றி சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு ஆகிய துறைகளிலும் ஒப்பந்தங்கள் இடப்பட்டுள்ளன.
தற்போது சீனா இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. நேற்று சீன நேரப்படி பகல் 11.56 மணிக்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. லாங்மார்ச் 2 சி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள்களுக்கு பி ஆர் எஸ் எஸ்1 எனவும் பாக் டி இ எஸ் 1 எனவும் பெயரிடப் பட்டுள்ளன.
இதில் பி ஆர் எஸ் எஸ் 1 செயற்கைக்கோளை சீனா வழங்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பாகிஸ்தானின் பருவநிலை மாற்றம், தேசிய பேரழிவு, விவசாயம் உள்ளிட்ட துறைகளை கவனிக்கும். மற்றொரு செயற்கைக் கோளான பாக் டி இ எஸ் 1 பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் ஆராய்ச்சி பணியை கவனிக்கும்.