டில்லி:

பாகிஸ்தான் பழங்குடி இன பிரிவினைவாதிகளிடம் சீனா கடந்த 5 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 6 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முதலீட்டை பாதுகாக்கும் வகையில் சீனா இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இந்த திட்டத்தில் முக்கிய பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள வடமேற்கு பாலுசிஸ்தான் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளுடன் சீனா நேரடி தொடர்பு வைத்துள்ளது. இதர நாடுகளின் உள்நாட்டு பிரச்னையில் தலையிடுவதில்லை என்று சீனா கடந்த அரை நூற்றாண்டாக கொள்கை கொண்டிருந்தது.

ஆனால் கோடி கணக்கான டாலர் முதலீட்டை பாதுகாக்கும் நோக்கத்தில் சீனா தனது கொள்கையில் இரு ந்து விலகி செல்கிறது. ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய கண்டங்ளுக்கு இடையில் வர்த்தக வழித்தடம் அமைக்கும் ‘பெல்ட் அண்டு ரோடு’ என்ற புதிய சில்க் சாலை திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சீனா நிரப்பி வருகிறது. பாகிஸ்தான் அரசியலில் சீனா தலையிடுவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேபாளம், மியான்மர், இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா தனது உறவை பலப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.