கைலாயம் – மானசரோவர் பகுதிகளை ராணுவமயமாக்கிய சீனா!

புதுடெல்லி: இந்தியாவுடனான எல்லைப் பகுதியில், பல போர் முஸ்தீபுகளை சீனா செய்துவரும் நிலையில், இந்துக்களின் புனித ஸ்தலமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி பகுதிகளும் தப்பவில்லை என்பது செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்தியாவுடனான எல்லைப் பகுதியில், பலவிதமான ராணுவ முஸ்தீபு நடவடிக்கைகளை சமீபகாலங்களாக மேற்கொண்டு வருகிறது சீனா.

லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கொலைகளை அடுத்து, இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் இன்னும் தணியாமல்தான் உள்ளது. மேலும், கைலாய மலையருகே தரையிலிருந்து வானில் பறந்து தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தியுள்ள தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கைலாய மற்றும் மானசரோவர் பகுதிகளை செயற்கைகோள் மூலம் பார்க்கும்போது, அப்பகுதி ஏதோ போர் ஏற்பாட்டு பகுதிபோல் காட்சித் தருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் மதம் சார்ந்த வழிபாட்டுப் பகுதியை சீனா அவமரியாதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.