வங்கதேசத்துடன் வர்த்தக மேம்பாட்டுக்கு வரி விலக்கு அளிக்கும் சீனா

--

பீஜிங்

ங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 97% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது.

சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா கடும் வரியை விதித்துள்ளது.  இதனால் சீனாவின் வர்த்தகம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது.  அத்துடன் சீனப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகும் இந்தியாவிலும் சமீபத்தில் சீனா நடத்திய லடாக் தாக்குதலுக்குப் பிறகு சீனப் பொருட்களை புறக்கணிக்கக் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.   எனவே சீனா வேறு பல நாடுகளில் வர்த்தக உறவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

 ஆசிய நாடுகளில் ஒன்றான வங்க தேசத்தில் சீனப் பொருட்கள் சுமார் 1500 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.   மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானதாகும்.  இதற்கு முக்கிய காரணம் சீனப் பொருட்களின் ஏற்றுமதி வரி அதிகமாக உள்ளதாகும்.  தற்போது வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ள சீனா பல பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க முன்வந்துள்ளது.

இது குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது தவுகிதுல் இஸ்லாம், “நாங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.  இதையொட்டி வங்க தேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 97% பொருட்களுக்குச்  சீன அரசு  வரி விலக்கு அளித்துள்ளது.

வங்க தேசம் மிகவும் குறைந்த முன்னேற்றம் அடைந்துள்ள நாடு என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த அடிப்படையில் வங்கதேசத்துக்கு 3095 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 8256 பொருட்களுக்கு சீனா வரி விலக்கு அளித்துள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.

You may have missed