மும்பை: சீனப் பொருட்களுக்கான இறக்குமதி விஷயத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதனால், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும், அந்நாட்டு துறைமுகங்களில் நெருக்கடிகளை சந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் 15ம் தேதி, லடாக் எல்லைப் பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. சீனப் பொருட்களை புறக்கணிக்க வ‍ேண்டுமென்ற கோஷங்களும் பெருமளவில் எழுந்தன.

இதன்பொருட்டு, சீனப் பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில், இந்திய வர்த்தக அமைச்சகத்தால் புதிய விதிமுறைகள் உண்டாக்கப்பட்டன. ஆனால், இந்தவகை புதிய விதிமுறையால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் வணிகர்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது என்ற குரல்களும் எழுகின்றன.

நிலைமை இப்படியிருக்கையில், இந்திய நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும், இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளதாகவும், அதன்மூலம், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள், சீன துறைமுகங்களில் அப்படியே தேங்கிக் கிடப்பதாகவும் தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.