எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டுவது எங்களது உரிமை…சீனா

பெய்ஜிங்:

அருணாச்சல் பிரதேசதுக்கு அருகில் தங்கச் சுரங்கம் தோண்டுவது தங்களது இறையாண்மை உரிமை என்று சீனா தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேச மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான தஙகம், வெள்ளி மற்றும் இதர கனிம தாதுக்கள் நிறைந்துள்ளன.

சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. அங்கு உட்கட்டமைப்பு பணிகளை அமைப்பதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது என்று ஹாங்காங் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சுரங்கப் பணிகள் நடக்கும் பகுதி முழுக்க முழுக்க சீனாவுக்கு சொந்தமான பகுதி என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லு காங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், ‘‘ தனது பிராந்திய பகுதிகளில் சீனா தொடர்ந்து மண்ணியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது சீனாவின் முழு இறையாண்மையாகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றவை. அந்த பகுதியை அருணாச்சல பிரதேசம் என்று சீனா எப்போதும் அழைத்தது கிடையாது’’ என்றார்.

அருணாச்சல் பிரதேசத்தின் ஒரு பகுதிய தெற்கு திபெத்திற்கு சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியா & சீனா இடையே 3,488 கி.மீ. தொலைவுக்கு எல்லை பிரச்னை உள்ளது. இந்த பகுதிகளில் சீனா தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு பிரச்னைகளை எழுப்புவது தொடர் கதையாகி வருகிறது.