அமெரிக்கா இதுவரை எதற்காவது இழப்பீடு அளித்ததா? : சீனா காட்டம்

பீஜிங்

கொரோனா தொடர்பாக இழப்பீடு கேட்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர்  கெங் சுவாங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று முதலில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது.  தற்போது அது உலகின் பல நாடுகளில் பரவி உள்ளது.  கொரோனா பாதிப்பு அடையாத நாடுகளை விரல் விட்டு எண்ணி விட முடியும்.   இந்த பாதிப்பு அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.  அமெரிக்காவில் இதுவரை 7.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 42000க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

அமெரிக்க அரசு இந்த கொரோனா வைரஸை சீனா கட்டுப்படுத்த தவறியதால் உலகெங்கும் பரவி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.  அத்துடன் கொரோனா பரவியதால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்காகச் சீனா இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் கூறி வருகிறது.  இதே கருத்தை ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்து வருகின்றன.

இது குறித்து சீன வெளியுறவுத் துரை அமைச்சக செய்தி தொடர்பாளர்  கெங் சுவாங், “கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கிய எச்1என்1 ஜுரம் உலகின் 214 நாடுகளில் பரவி சுமார் 2 லட்சம் பேரைப் பலி வாங்கியது.  அதற்காக இதுவரை யாராவது அமெரிக்காவிடம் இழப்பீடு கேட்டுள்ளனரா?  அமெரிக்கா ஏதும் இழப்பீடு கொடுத்துள்ளதா?

கடந்த 1980களில் அமெரிக்காவில் முதன் முதலில் எய்ட்ஸ் கண்டறியப்பட்டது.   அது வேகமாக உலகெங்கும் பரவி உள்ளது.  இன்று வரை எய்ட்ஸ் அச்சம் குறையவில்லை.  இதற்கு அமெரிக்காதான் காரணம் என யாராவது கூறி உள்ளனரா? அல்லது இதற்கு அமெரிக்கா இழப்பீடு அளித்ததா?

அது மட்டுமல்ல கடந்த 2008 ஆம் வருடம் அமெரிக்காவின் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் கவிழ்ந்ததால் உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி உண்டானது.  இதைச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் கிஷோர் மபூபனி உறுதி செய்துள்ளார்.  ஆனால் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் அமெரிக்காவிடம் பொறுப்பேற்கும்படி கேட்கவில்லை.” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி