டெல்லி: அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் கடத்தப்பட்ட அந்த பகுதியைச் சேர்ந்த 5 இந்தியர்களை சீனா ராணுவம் இன்று ஒப்படைக்க உள்ளதாக  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.

இந்தியா சீனா இடையே எல்லைப்பிரச்சினை காரணமாக, பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், கடந்த வாரம், இந்தியாவின் எல்லைப்பகுதி  அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்குச் சென்ற 5 இந்தியர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக, அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. சீன ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து,  5 இந்தியர்களும் தங்கள் வசம் நலமோடு, இருப்பதாக சீன ராணுவம் தெரிவித்தது.

இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நலையில், கடத்தப்பட்ட 5 இந்தியர்களையும், இன்றைய தினம் ஒப்படைப்பதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களை கிபிது எல்லையில் உள்ள வாச்சா பகுதியில் ஒப்படைக்கிறது. இதை மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ உறுதிப்படுத்தி உள்ளார்.