கடுங்குளிரா, சமரசமா? லடாக் எல்லைப்பகுதியில் இருந்து 10ஆயிரம் ராணுவ வீரர்களை வாபஸ் பெறுகிறது சீனா…

லடாக்: காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லைக்கோட்டுப்பகுதியில் வீரர்களை குவித்த சீனா, தற்போது 10ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறுவதாக தெரிவித்து உள்ளது.  முதல்கட்டமாக பள்ளத்தாக்கு பகுதியின் உள் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த வீரர்கள் வாபஸ் பெறுவார்கள் என கூறப்படுகிறது. எல்லையில் உள்ள வீரர்கள் அப்படியே பாதுகாப்பு பணிகளை தொடர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலம்  லடாக்கில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் கடந்த ஆண்டு (2020) மே மாதம் முதல், சீனா அத்துமீறி வருகிறது. இந்தி பகுதிக்குள் புகுந்து ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய சீன வீரர்கள் இடையே அவ்வப்போது மோதல்கள் தொடர்கின்றன. இதை தடுக்க இரு நாட்டு ராணுவ தலைவர்களிடையே பலதர்ப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. தனது பிடிவாதத்தை தளராதன  சீனா, தற்போது திடீரென படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆனால், முன்களப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் எப்போதும் போல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருதரப்பு வீரர்களும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.‘

சீனாவின் திடீர் வாபஸ்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நிலவும், கடுங்குளிர் காரணமாக, வீரர்களை சீனா வாபஸ் பெறும் நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,  இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ஒருவர், இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர், அவர் பத்திரமாக சீனா ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.