ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் – காஷ்மீர் விவாத கோரிக்கையை திடீரென வாபஸ் பெற்ற சீனா..!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் அவ‍ையின் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சீனா வாபஸ் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மோடி அரசு சட்டம் இயற்றியது. இதனையடுத்து அங்கே மனித உரிமைகள் கடுமையாக நசுக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் நீடித்து வருகின்றன.

இந்திய அரசின் இந்த செயலுக்கு சர்வதேச தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் தொடர்ந்து தனது எதிர்வினையை ஆற்றி வருகிறது. சீனாவும் சில சமயங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சீனா முன்வைத்து பரபரப்பைக் கிளப்பியது.

ஆனால், தனது கோரிக்கையை சீனா திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் தொடர்பான விவாதம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.