கான்

சீனாவின் ஊகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோருக்கான மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டுள்ளது.

சீனாவில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசால் நாடெங்கும் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர்.   இந்த வைரஸ் தாக்குதல் சீனாவின் ஊகான் நகரில் இருந்து தொடங்கியது.   நாட்டில் அதிக அளவில் பாதிப்பு இந்த நகரில் ஏற்பட்டுள்ளது.  எனவே அரசு இந்த நகரை மற்ற பகுதிகளில் இருந்து முழுவதுமாக துண்டித்தது.

ஊகான் நகரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க அரசு ஒரு புதிய மருத்துவமனை கட்ட தொடங்கியது.  சுமார் 10 நாட்களுக்குள் இந்த மருத்துவமனையைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.  இந்த மருத்துவமனை சுமார் 25000 சதுர மீட்டர் பரப்பளவில் 1000 படுக்கைகளுடன் அமைக்கப்படத் திட்டம் தீட்டப்பட்டது.

அதன்படி அவசரம் அவசரமாக இந்த மருத்துவமனை கட்டப்பட்டு தற்போது சிகிச்சைக்காகத் திறக்கப்பட்டுள்ளது.  இந்த மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு இரு தினங்களே ஆன நிலையில் திறக்கப்பட்டுள்ளது.  இந்த மருத்துவமனை அமைக்க 500 தொழிலாளர்களும் சுமார் 10க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் இரவும் பகலும் பயன்படுத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான முதல் சிறப்பு மருத்துவமனை என்னும் புகழை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது.  இந்த மருத்துவமனை அருகில் 2300 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் மற்றொரு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.