சர்வதேச சந்தையில் இறங்கும் சீன சிகரெட் நிறுவனம்

ஷாங்காய்

சீனாவின் புகழ்பெற்ற சிகரெட் நிறுவனமான சீனா நேஷனல் டுபாக்கோ கார்பொரேஷன் ஹாங்காங் பங்குச் சந்தை மூலமாக சர்வதேச சந்தையில் இறங்க உள்ளது.

உலகில் அதிக அளவில் புகையிலை உபயோகிக்கும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அரசுக்கு புகை பிடிப்பவர்கள் மூலம் ஏராளமான வரி வருவாய் கிடைப்பதால் புகைப்பிடிப்பதை அரசு தடை செய்வது இல்லை. சென்ற வருடம் இளைஞர்கள் புகை பிடிப்பதை தடுக்க வேண்டும் என புகைக்கு எதிர்ப்புக்குரல் எழ்ந்ததால் சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்டது.

சீனாவில் மிகப் பெரிய சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் சீனா நேஷனல் டுபாக்கோ கார்பரேஷன் ஆகும். இதனுடைய துணை நிறுவனம் சீனா டுபாக்கோ இண்டெர்நேஷனல் எனப்படுவதாகும். இந்த நிறுவனம் பிரேசில் மற்றும் கனடாவில் இருந்து புகையியலையை தனது தாய் நிறுவனத்துக்காக இறக்குமதி செய்து வந்தது. உலகில் அதிகமாக புகையிலை கொள்முதல் செய்யும் நிறுவனம் என இந்த நிறுவனம் கூறப்படுகிறது.

தற்போது இந்த சீனா டுபாக்கோ இண்டர்நேஷனல் நிறுவனம் ஹாங்காங் பங்குச் சந்தை மூலம் சர்வதேச சந்தையில் இறங்குகிறது. உலகில் உற்பத்தியாகும் 10 சிகரெட்டுக்களில் 4 சிகரெட் இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் உள்ள மிகப் பெரிய சிகரெட் நிறுவனங்கள் ஐந்தின் மொத்த பங்கு மதிப்பும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பும் ஒன்று என கூறப்படுகிறது.