புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் டனல் இன்ஜினியரிங் கோ. லிட்.(எஸ்டிஇசி) நிறுவனம், டெல்லி – மீரட் இடையிலான ஆர்ஆர்டிஎஸ் வழித்தடத்தில், நியூ அசோக் நகர் மற்றும் சாஹிபாபாத் இடையிலான 5.6 கி.மீ. நீளமுள்ள சுரங்க வழித்தட ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது.

டெல்லி – மீரட் இடையே பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு(அதிவேக ரயில்) கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில், நியூ அசோக் நகர் மற்றும் சாஹிபாபாத் இடையே சுரங்க வழித்தடம் அமைக்கப்பட வ‍ேண்டும். எனவே, இந்த சுரங்க வழித்தடத்திற்கு, கட்டுமான நிறுவனங்களிடமிருந்து ஏல ஒப்பந்தங்கள் கோரப்பட்டன.

தேசிய தலைநகரப் பிராந்திய போக்குவரத்துக் கழக நிறுமம்(என்சிஆர்டிசி) இந்த ஒப்பந்த பணிகளை மேற்கொண்டது.

இந்த ஏலத்தில் மொத்தம் 5 தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில், சீனாவின் எஸ்டிஇசி நிறுவனம், குறைவான ஒப்பந்த தொகையை இறுதிசெய்து, ஒப்பந்தத்தைக் கைப்பற்றியது.

நிறுவனங்களும், அவை இறுதிசெய்த ஒப்பந்த ஏலத் தொகை விபரங்களும்;

* Shangai Tunnel Engineering Co. Ltd – ரூ.1126 கோடிகள்

* Larsen & Toubro Ltd (L&T) – ரூ.1170 கோடிகள்

* Gulermak Agir sanayi Insaat ve Taahhut A.S. – ரூ.1326 கோடிகள்

* Tata projects Ltd – SKEC JV – ரூ.1346 கோடிகள்

* Afcons Infrastructure Ltd – ரூ.1400 கோடிகள்

 

இந்த 5.6 கி.மீ. வழித்தடத்தை, சீன நிறுவனம் 1095 நாட்களில் நிறைவுசெய்யும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.