புதுடெல்லி: இந்திய – சீன எல்லையில், லடாக் பகுதியில், சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்திய ராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, சீன ராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை கட்டி வருவதாக இந்திய ராணுவம் தரப்பிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவங்களுக்கிடையே உறவுநிலை சீராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருநாட்டு வீரர்களுக்கிடையே கைக்கலப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.
கல்வான் மற்றும் பான்காங் ஸோ ஆகிய இரண்டு இடங்களில் இந்த பதுங்கு குழிகள் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவம் 100 கூடாரங்களை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கண்ட பதுங்குக் குழிகளை கட்டும் பொருட்டு, பல எடை மிகுந்த கட்டுமானப் பொருட்களை சீன ராணுவம் கொண்டுவந்துள்ளதாம்.
வெளியான தகவல்களின்படி, இந்தியாவால் உரிமைகோரப்படும் பேட்ரொல் பாயின்ட் 14 (PP14)  மற்றும் கோக்ரா போஸ்ட் உள்ளிட்ட மொத்தம் 4 பகுதிகளில் அதிகளவு எண்ணிக்கையிலான சீன துருப்புகள் ஊடுருவியுள்ளன. இதனால், கூடுதல் இந்திய துருப்புகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளன.
இருநாட்டு துருப்புகளிடையே நடைபெற்றுவரும் இந்த மோதல் போக்கு, வழக்கமானதல்ல என்றும் கூறப்படுகிறது.