பைசிங்,

ந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை காரணமாக இரு தரப்புக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், சீன படைகள் மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது.

இந்தியா சீனாவுக்கு இடையே உள்ள அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டோக்லாம் பிரச்சினை காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து மோடி சீனா பயணமானார். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து பதற்றம் தணிந்தது. இந்நிலையில், டிசம்பர் மாத இறுதியில் அருணாசலப் பிரதேசத்தின் பைசிங் எல்லை பகுதியில் சாலை அமைப்பதாக கூறி சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக கூறப்படுகிறது.

சாலைகளை செப்பனிடுவதாக சீன ராணுவத்தினர் அந்த பகுதியில் வாகனங்களுன் வந்ததாக அந்த பகுதி கிராம மக்கள் கூறியதாக தகவலகள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக, இந்திய – திபெத் எல்லைக் காவல் படையினர் சர்ச்சைக்குரிய பைசிங் பகுதிக்கு விரைந்து வந்து,  சீன ராணுவத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்ததாகவும், ஆனால்,  சீன ராணுவத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த பகுதியில்  இந்தியப் படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அருணாச்சலபிரதேச எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில், சீனப் படைகள் பின்வாங்கி தங்களது பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு  அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.