டெல்லி:

பாகிஸ்தானை போல் சீனாவும் இந்திய எல்லைகளில் அவ்வப்போது அத்துமீறி ஊடுறுவலில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் சீன ராணுவம் தற்போது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

சிக்கிமின் தோகா லா பகுதியில் இந்த மோதலான போக்கானது கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வருவதாக தெரிகிறது. கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்பவர்களை சீன ராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளது.

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மேலும் முன்னேறி வராமல் தடுக்க இந்திய ராணுவம் கடினமாக போராடி வருகிறது. சீன ராணுவத்தை தடுக்க இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஒரு மனித சங்கிலியை ஏற்படுத்தி உள்ளது. சீன ராணுவம் இந்த சம்பவங்களை வீடியோ, போட்டோ எடுத்துள்ளது. தோகா லா பகுதியில் 2 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே கடந்த 20-ம் தேதி கொடி கூட்டம் நடந்தது.

ஆனால் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் அங்கு பதற்றம் தொடர்கிறது. தோகா லா பகுதியில் சீன ராணுவம் இதுபோன்ற ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது. தோகா லா பகுதியானது சிக்கிம், பூடான் – திபெத்தை எல்லையில் அமைந்து உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டும் சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழியை அழித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இது தொடர்பாக டைம்ஸ்-ஆப்-இந்தியா எல்லையில் நடந்த சம்பவம் என வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்திய எல்லைக்குள் முன்னோக்கி வரும் சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் கையால் தடுத்து நிறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

சீன ராணுவ வீரர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் வீடியோவில் சம்பவங்களை படம் பிடிக்கிறார்கள். மேலும் புகைப்படம் எடுக்கிறார்கள். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை பிடித்து சீன எல்லையை நோக்கி தள்ளுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.