கொரோனா வைரஸ், உலகம் முழுக்க ஒலிக்கும் இந்த பெயரை முதலில் உச்சரிக்க ஆரம்பித்த சீனாவில் உயிர் பலிகள் தொடரும் நிலையில்.

சீனாவை போல் அதிகம் பாதித்த நாடான ஈரானில்  சீனாவில் இருந்து சென்றவர்கள் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களாகவும், சீன நிறுவனங்களில் வேலைசெய்பவர்களாகவும் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவ்வாறு 30 சீன மாணவர்கள் உட்பட 200 சீனர்கள், கொரோனா  பாதித்த  ஈரான் நாட்டில் செய்வதறியாது தவித்துக்கொண்டிருக்க, அவர்களை கடந்த வாரம் சொந்த நாட்டுக்கு அழைத்துவந்தது சீன அரசு.

அப்படி வந்தவர்களில் ஒருவர் ஈரானில் இருந்து சீனாவிற்கு வந்திறங்கியது முதல் தான் தனிமையில் தங்கவைக்கப்பட்டது வரையிலான காட்சிகளை படம் பிடித்தார், அதனை சீன தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

விமான நிலையம் வந்திறங்கியவர்களை, விமான ஓடுபாதையில் அமைக்கப்பட்டிருக்கும் தாற்காலிக வரவேற்பு பகுதியில் இருக்கும் ஊழியர்கள் அவர்களை  பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் தயாராக வைத்திருக்க சொல்கிறார்கள், அவர்களின் ஆவணங்களை கிருமி நீக்கம் செய்து, அவர்களை புதிய முகமூடி மற்றும் கையுறைகளை அணியச்சொல்கிறார்கள். பாதுகாப்பு சோதனைக்கு பின் சிறப்பு பேருந்துகளில் அமரவைத்து, அவர்களை தனிமையில் இருக்க ஏற்பாடு செய்திருக்கும் தங்குமிடத்திருக்கு அழைத்துச்செல்கிறார்கள்.

தங்குமிடத்தில் இருக்கும் ஊழியர்கள் அவர்களின், பெயர், விலாசம் கேட்டறிந்து, அகச்சிவப்பு தெர்மோமீட்டர்  மூலம் அவர்களின் காய்ச்சலை   சோதிக்கிறார்கள், (ஈரானில் தொடங்கிய இந்த சோதனை தங்குமிடம் வரை 7 முறை சோதிக்கப்படுகிறது) கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அவர்களுக்கு உரிய அறையில் சென்று தங்க சொல்கிறார்கள்.

பயணி தான் கொண்டுவந்த உடைமைகளை, தங்குமிட வரவேற்பறையில் விட்டுச்செல்ல அதனை 6 மணி நேரம் கழித்து அவரின் அறைக்கு வெளியே வைத்து செல்கிறார்கள்.

அறைக்கு செல்லும் வழியில் இருக்கும் இருபுற சுவர்களிலும் தினமும் மாற்றக்கூடிய வகையில் காகிதத்திலான மெல்லிய திரைசீலையை சுவர்களை தொடாத வண்ணம் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு அறையிலும் 14 நான்கு நாட்கள் தனிமைக்கு தேவையான குடிநீர் பாட்டில்கள், கை துடைக்கும் காகிதங்கள், துணி துவைக்க, குளிக்க, பல் துலக்க தேவையான பேஸ்ட் முதல் துண்டு வரை அனைத்தும் வைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, அறையில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு அட்டவணையும் வைக்கப்பட்டிருக்கிறது, அறையின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் மேஜையின் மீது உணவு கொண்டுவந்து வைக்கப்படுகிறது.

இப்படி சகலமும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு வழங்கப்பட, அவர்களோ இந்த உபசரிப்பு மற்றும் கவனிப்புக்காக தான் நாங்கள் சீனாவில் இருக்க விரும்புகிறோம் என்று பெருமையாக கூறுகிறார்கள்.

இதோ அந்த மீட்பு நடவடிக்கை காட்சிகள் ….