சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மனித சோதனைகளின் இறுதி கட்டத்திற்கான ஒப்புதல்

சீன அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பு மருந்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதி கட்ட மனித சோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து உருவாக்கும் உலக அளவிலான முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரங்களில் இது முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பெய்ஜிங்கைச் சார்ந்த சீனா நேஷனல் பயோடெக் குரூப் கோ நிறுவனத்திற்கு கடந்த மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றாம் கட்ட மனித சோதனைகளை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ WeChat கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்தின் சோதனை மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேற்கொள்ள அபுதாபியைச் சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான ஜி 42 உடன் இணைவதாக CNBG – சிஎன்பிஜி தெரிவித்துள்ளது. அதே சமயம் காலம், பங்கேற்கும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை முதலான சோதனைகளின் திட்டங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லை. உலகின்வேகமாக வளர்ந்து வரும் தடுப்பு மருந்து தயாரிப்பு திட்டமாகக் கருதப்படும் இது, பொது பயன்பாட்டுக்கு வரும் முன், அதன் மூன்றாவது மற்றும் இறுதி மனித சோதனைகளை நெருங்குகிறது. 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து 476,000 க்கும் அதிகமானவர்களைக் பலிகொண்டுள்ள தனித்துவ கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு சிறந்த தடுப்பு மருந்தை உருவாக்குவதில் முந்திக் கொள்ள உலகெங்கிலும் உள்ள மருந்து நிறுவனங்கள் தீவிரப் போட்டியில் இறங்கியுள்ளன.

சிஎன்பிஜி-யே மூன்றாவது கட்ட மனித சோதனைக்கு முன்னேறியுள்ள முதல் சீன தடுப்பு மருந்து நிறுவனம் ஆகும். இது உருவாக்கியுள்ள இரு தடுப்பு மருந்துகளும் நோய்தடுப்புக்கு எதிரான செயல்பாட்டிற்கு சோதிக்கப்பட்டு வருகின்றன.  மனித பரிசோதனையின் இறுதி கட்டத்தை முடிக்க சீன நிறுவனங்கள் பெருமளவில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் இடங்களைத் தேடி வருகின்றன. ஏனெனில் இந்த சோதனைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தேவைப்படுகின்றனர்.  சீனாவில் மட்டுமே இருக்கும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு இத்தகைய சொதனைகளை நடத்துவது  சாத்தியமில்லாத ஒன்றாகும். யுஏஇயில் மொத்தம் 45,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன், நாளொன்றுக்கு நூற்றுக் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதால் சோதனைகள் இங்கே திட்டமிடப்பட்டுள்ளன.

சீனாவின் பயோடெக் கன்சினோ பயோலாஜிக்ஸ் இன்க். நிறுவனம்  சீன இராணுவத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்துக்கான மனித பரிசோதனைகளை நடத்துவதற்கு கடந்த மாதம் கனடாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், மூன்றாம் கட்ட சோதனைக்குச் செல்வதற்கு முன் ஆரம்பப் பாதுகாப்பு ஆய்வுகளை மீண்டும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பெய்ஜிங்கை சார்ந்த சினோவாக் பயோடெக் லிமிடெட், இன்ஸ்டிடியூட் ஆஃப் புட்டான்டனுடன் இணைந்து பிரேசிலின் அதிக கொரோனா தொற்று பாதிப்புடைய இடங்களில் அதன் தடுப்பு மருந்தை பரிசோதித்து. ஆனால், எதனாலோ அந்த சோதனைகள் மேலும் தொடர அனுமதி வழங்கப்படவில்லை.

சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களும் மூன்றாம் கட்ட மனித சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா பி.எல்.சி இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து இந்த மாதத் தொடக்கத்தில் பிரேசிலில் 2,000 பேர்களைக் கொண்டு சோதிக்கப்படும். கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட மாடர்னா இன்க். அடுத்த மாதம் அமெரிக்காவில் 30,000 நபர்களைக் கொண்டு சோதனைகளைத் தொடங்க உள்ளது.

சிஎன்பிஜி உருவாக்கிய இரண்டு தடுப்பு மருந்துகளும், ஏற்கனவே சீனாவில் நடத்தப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் சுமார் 2,000 நபர்களிடையே சோதனை செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசிகளில் ஒன்று பொதுவாக பாதுகாப்பானது என்று ஏற்கனவே  கண்டறியப்பட்டுள்ளது. மற்றொன்றின் முடிவுகள் ஜூன் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும், பொதுப்பார்வைக்கு இனிமேல் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்பிஜி மற்றும் அதன் தலைமை நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த மருந்துகள் ஏற்கனவே வழங்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளன.

சீன அரசு நடத்தும் நிறுவனங்களின் ஊழியர்களில் குறிப்பாக,  வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் அல்லது பெய்ஜிங்கில் அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் போன்றோருக்கு சிஎன்பிஜி தடுப்பு மருந்து தன்னார்வ அடிப்படையில் சமீபத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும்,  இது சமீபத்தில் இரண்டாம் முறை வைரஸ் தொற்று பரவிய பகுதிகளிலும் சோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில்: லயா

கார்ட்டூன் கேலரி