டில்லி,
பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவதால், சீன பொருட்களை வாங்காதீர்கள் என சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆனால், சீன தயாரிப்புகளை புறக்கணிப்பது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
china
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2001-ம் ஆண்டே உலகளாவிய தடை விதித்தது. ஆனால், அதன் தலைவர்மீது நடவடிக்கை எடுப்பதை சீனா தடுத்து வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, பயங்கரவாதிகளை வளர்த்து விடும்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவதால், இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
’சீனாவின் பொருட்களை நிராகரியுங்கள்’ என்ற பிரச்சாரமானது வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்துள்ளார்.
அவரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவரிடம் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்கும் சூழல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
china1
விகாஸ் ஸ்வரூப் பதில் அளிக்கையில்,
“சீன தயாரிப்புகளை புறக்கணிப்பது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொருளாதார பிரச்சினைகளை முதன்மையாக கொண்டே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த மாநாட்டில் தற்போது சர்வதேச மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்தே விவாதிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த அமர்வின்போது பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதித்து, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக செயல்திட்டம் வகுக்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.