மும்பை: கடந்தாண்டு அக்டோபர் மாதம், மராட்டிய தலைநகர் மும்பையில் ஏற்பட்ட சில மணிநேர மின்தடைக்கு, சீன கைங்கர்யம் காரணமாக இருக்கலாம் என்று புதிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த அக்டோபர் 12ம் தேதி, மும்பையில் இந்த மின்தடை பிரச்சினை ஏற்பட்டது. அந்த சமயத்தில், இந்திய – சீன எல்லைப் பிரச்சினை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணமான மால்வேரை கண்டறியும் பணியில், அமெரிக்காவின் மசாசுசெட்ஸை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் என்று ஈடுபட்டது. அந்நிறுவனம் அளித்த அறிக்கையின்படி, பெரும்பாலான மால்வேர்கள் இயங்கவில்லை. எனவே, சிறியளவிலான மால்வேர்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, இந்த பிரச்சினைக்கு சீனா காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதாவது, சீனா மேற்கொண்ட சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று அச்செய்தி தெரிவிக்கிறது.

ஆனால், மத்திய மின்சார அமைச்சகம், மும்பை மின் தடைக்கு காரணம் சைபர் தாக்குதல் அல்ல என்றுள்ளது. வேறுசில இடங்களில் ஏற்பட்ட மின்தடைகளுக்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம்; அதேசமயம் மும்பை சம்பவத்துக்கு இது காரணமல்ல என்று கூறப்பட்டுள்ளது.