புதுடெல்லி :

சீனாவைப் புறக்கணிப்போம் என்று மத்திய அரசு கூறிவரும் அதேவேளையில் பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா இந்தியாவின் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்குகளை வாங்குவது இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கியின் பங்குகளை ஏற்கனவே சீன மத்திய வங்கி வாங்கியது நாட்டில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்குகளையும் வாங்கி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, சீனா தனது முதலீடுகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தவிர மற்ற மூன்றாம் உலக நாடுகளில் குவித்துவருகிறது.

இந்திய எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சீனாவுக்கு எதிராக உள்நாட்டில் குரலெழுந்ததைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களில் சீனா முதலீடு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது மூலதனத்தை உயர்த்த ரூ. 15,000 கோடி நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது, கடந்த வாரம் முடிவடைந்த இந்த நிதி திரட்டும் முயற்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவன முதலீடுகள் பிரிவில் (Institutional Investors) உள்நாட்டு பரஸ்பர நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் என 357 நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன.

பீப்பிள்ஸ் பாங்க் ஆஃப் சீனா ரூ. 15 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி இருக்கிறது. இதுகுறித்து கூறிய நிபுணர்கள், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தடை தளர்த்தப்பட்டிருப்பதாகவும்.

இந்த முதலீடு சொற்ப அளவு என்பதாலும், இது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் செயல்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், 5 சதவீதம் அல்லது அதற்கு மேலான சீன முதலீடுகளுக்கு மட்டுமே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அனுமதி அவசியம் என்றும் கூறினார்கள்.

மேலும், வங்கி நிறுவனத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருப்பதால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் சீன முதலீடு குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.