ஜின் ஜியாங்,  சீனா

பாகிஸ்தான் நாட்டினரை திருமணம் செய்துக் கொண்டுள்ள சீனாவை சேர்ந்த இஸ்லாமிய பெண்களை பிரித்து அவர்களை மறு கல்வி மையத்துக்கு சீன அரசு அனுப்பி வைக்கிறது.

சீன நாட்டின் ஜின் ஜியாங் பகுதி இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும்.    பாகிஸ்தானில் இருந்து வர்த்தகம் செய்ய வந்துள்ள பல இஸ்லாமியர்கள் இங்கு வசிக்கின்றனர்.    இவர்கள் இதே பகுதியில் வசிக்கும் சீன இஸ்லாமியப் பெண்களை மணம் புரிந்து வாழ்க்கை நடத்துகின்றனர்.    இந்த பாகிஸ்தான் – சீனா தம்பதிகளால் சீனாவில் இஸ்லாமிய மக்கள் பெருகி வருவதாக ஒரு கணக்கு தெரிவிக்கிறது.

சீனா பாகிஸ்தானுடன் நட்பு நாடாக இருந்த போதிலும்,  தனது நாட்டில் இஸ்லாமிய மக்கள் தொகை பெருகுவதை விரும்பவில்லை.   மேலும் சீனா – பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பாக் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெறுகின்றது.     பாகிஸ்தான் அரசு அவர்களை அடைக்கி வைத்துள்ளதாக கூறிய போதிலும் இந்த தாக்குதல் நடைபெறுவது முழுமையாக நிற்கவில்லை.   அத்துடன் ஜின் ஜியாங் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அந்த தீவிரவாதிகளுக்கு  அடைக்கலம் அளிப்பதும் சீன அரசுக்கு பிடிக்கவில்லை.

இதனால் அதிரடி நடவடிக்கையாக பாகிஸ்தான் ஆண்களை மணந்த சீன பெண்களை சீன அரசு பிரித்து மறு கல்வி மையத்தில் சேர்த்துள்ளது.    இதுவரை இந்தப் பகுதியில் உள்ள 1,20,000 பெண்கள் இது போல பிரிக்கப்பட்டு இந்த மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.   இந்த மையத்தில் இவர்களுக்கு சீன கலாச்சாரம் பற்றியும்,  அன்னிய தீவிரவாதத்தால் சீனாவுக்கு உண்டாக உள்ள துயரங்களைக் குறித்தும் எடுத்துரைக்கப் படுவதாக தெரிய வந்துள்ளது.