பெங்களூரு நகரில் 60 ஜிஎஸ்டி பதிவுகளை வைத்திருந்த சீனர்

பெங்களூரு

சீன நாட்டின் வுகான் நகரை சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலத்தில் 60 ஜிஎஸ்டி பதிவுகளை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் வர்த்தகம் செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.   இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிறுவன விவரங்களை அவ்வப்போது பரிசீலனை செய்வது வணிக வரித்துறை அதிகாரிகளின் வழக்கமாகும்.   அவ்வகையில் பெங்களூருவில் பழைய விமான நிலையச் சாலையில் ஒரே முகவரியில் பல நிறுவனங்கள் பதியப்பட்டுள்ளதாகச் சந்தேகம் எழுந்தது.

அதையொட்டி அந்த பகுதியில் வணிக வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  அந்த முகவரியில் நிறுவனத்துக்குப் பதில் ஒரு கோடவுன் இருந்துள்ளது.  மேலும் சோதனை செய்ததில் அங்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட 25,446 பொருட்கள் இருந்துள்ளது.  இவை அனைத்தும் அதிக அளவில் விற்கப்படும் மின்னணு தினசரி உபயோகப் பொருட்கள் ஆகும்.    இவற்றின் மதிப்பு ரூ.4 கோடி ஆகும்.

இந்த இடத்தை வாடகைக்கு எடுத்திருந்தவர் சீனா நாட்டின் வுகான் நகரைச் சேர்ந்தவர் எனவும் இந்த முகவரியில் அவர் 60 ஜிஎஸ்டி பதிவுகளைச் செய்துள்ளதும் சோதனையில் கண்டறியப்பட்டது.   இதில் ஒரு பதிவு 2017-18 ஆம் வருட,ம், 43 பதிவுகள் 2018-19 ஆம் வருடம், 14 பதிவுகள், 2019-20 ஆம் வருடம் மற்றும் 2 பதிவுகள் 2020-21 ஆம் வருடம் செய்யப்பட்டுள்ளன.

இந்த 60 நிறுவனங்களும் பிரைவேட் லிமிடெட் என்னும் பிரிவில் பதியப்பட்டு 24 பேர் மாறி மாறி இயக்குநர்களாகக் காட்டப்பட்டிருந்தது.  ஆனால் அது போல யாருமே இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இந்த நிறுவன அதிபரான சீனர் வுகான் நகரத்தில் இருந்து 2020 ஆம் வருடம் ஜனவரியில் இருந்து இங்கு வரவில்லை என்பது அவரது ஊழியர்கள் இந்த நிறுவனத்தை நியமிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அந்த கோடவுனை வணிகவரித்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து நிறுவனத்துக்கு தொடர்பானவர்களைத் தேடி வருகின்றனர்.