சீனாவின் சினோபார்ம் கொரோனா  தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அறிவிப்பு…

பீஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் சினோபார்ம் கொரோனா  தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அந்நாடு அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு  (2019) சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி, பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது உருமாறிய நிலையில், 2வது கட்டமாக மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. இதில் பல நிறுவனங்களில் தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கும் வந்துள்ளன.

இந்த நிலையில்,  சீனரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனமும்  தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. சினோபார்ம்  நிறுவனத்தின் 2 பிரிவுகள் தனித்தனியாக 2 தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அந்த தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த அறிவிப்பை சீனா வெளியிட்டு உள்ளது.

அதன்படி,   பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட சினோபார்ம் நிறுவனப் பிரிவு தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 86 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.

சினோபார்ம் நிறுவனத்தின் மற்றொரு பிரிவான உகான் நகரத்தில் செயல்படும் பிரிவு தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. இதில் அந்த தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சினோபார்ம் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விட்டபோதிலும், அங்கு இதுவரை எந்த ஒரு தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.