அருணாசலப் பிரதேசத்தில் சீனப்படைகள் கண்காணிப்பு : பாஜக எம்பி எச்சரிக்கை

டாநகர்

சீனப்படைகள் எல்லையில் கண்காணிப்பு நடத்துவதால் இந்தியா கவனமுடன் இருக்க வேண்டும் என பாஜக மக்களவை உறுப்பினர் தபிர் காவ் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையில் லடாக் பகுதியில் முகாமிட்டிருந்த சீனப்படைகள் இறுதிக் கட்ட பேச்சு வார்த்தையின் போது திரும்பச் செல்லும் எனச் சீனா தெரிவித்தது.  ஆனால் கடந்த 15 ஆம் தேதி சீனா நடத்திய திடீர் தாக்குதலில் தமிழக வீர்ர் பழனி உள்ளிட்ட 20 இந்திய வீரர்கள் பலியானார்கள்.  இந்நிகழ்வு இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது

கிழக்கு அருணாசலப் பிரதேச மக்களவை தொகுதி பாஜக உறுப்பினர் தபிர் காவ், “சீனப்படைகள் சர்வதேச எல்லையில் இன்னும் நடமாடிக் கொண்டு உள்ளனர்.   எனவே இந்திய அரசு அருணாசலப் பிரதேசத்தில் மட்டுமின்றி சீக்கிம், இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் மாநிலத்திலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

சீன ராணுவத்தினர் தினமும் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் கண்காணிப்பு நடத்தி வருகின்றனர்.   இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும்.

சீனா கடந்த 1962 ஆம் வருடத்தில் இருந்தே தனது எல்லை விரிவாக்கத்தை நடத்த ஆயத்தமாகி உள்ளது.  அதற்கேற்ப கட்டுமானப் பணிகளையும் சாலை அமைப்புப் பணிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.   கடந்த 2017 ஆம் அண்டு இந்திய நாட்டுக்குள் ஒரு சாலை ஒன்றைச் சீனா அமைத்தது.  அது இந்திய ராணுவத்தால் பிறகு தடுக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.

இந்தியச் சீன எல்லை மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீனப்ப்டைகள் அதிகம் காணப்படுவதாகப் புகார்கள் பல முறை வந்தது உண்டு.  பாஜக மக்களவை உறுப்பினர் தபிர் காவ் ஏற்கனவே  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சீனபடைகள் மாநிலத்தில் நுழைந்து அஞ்சாவ் மாவட்டத்தில் ஒரு ஓடையின் குறுக்கே பாலத்தை அமைத்ததாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.