கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா வெளியேறுவது நல்ல முன்னேற்றம் : காங்கிரஸ் கருத்து

டில்லி

சீனப்படைகள் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுவது ஒரு நல்ல முன்னேற்றம் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையான லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் குவிக்கப்பட்டன.    பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு அங்கிருந்து திரும்பச் செல்வதாக சீனப்படைகள் ஒப்புக்கொண்டன.  ஆனால் திடீரென சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.  சுமார் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையொட்டி இந்தியச் சீன நாடுகளுக்கிடையே கடும் பிரச்சினை எழுந்தன.  இந்தியப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதால் இந்த தாக்குதல் நடந்ததாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.   ஆனால் மத்திய அரசு அதை ஒப்புக் கொள்ளவில்லை.  கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவத்தினரைத் திரும்ப அழைத்துக் கொள்ளச் சீனாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.

இந்நிலையில் நேற்று சீனப்படைகள் தங்கள் முகாம்களைக் கலைத்து விட்டுத் திரும்பச் செல்லத் தொடங்கி உள்ளதாக அரசு அறிவித்தது.  இது நாட்டு மக்களுக்கு மன நிம்மதியை அளித்துள்ளது.  இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, “தற்போது எல்லையில் நிகழும்  பதற்றத்தைத் தவிர்க்க சீனப்படைகள் அங்கிருந்து செல்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

சீனப்படைகள் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுவது ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும்.   இதைப் போல் பாக்காங் ஏரிப் பகுதியில் இருந்தும் சீனப்படைகள் விலக வேண்டியது அவசியம் ஆகும்.  எல்லையில் அமைதி நிலவ வேண்டியது முக்கியம் எனச் சீனா புரிந்துக் கொள்ள வேண்டும்.

ராணுவக் குவிப்புக்கு முந்தைய நிலையைச் சீனா ஏற்படுத்துவது மக்களுக்கு நம்பிக்கையை உண்டாகும்.   இதே நம்பிக்கையை இந்திய மக்களுக்குப் பிரதமர் மோடி சீன ஆக்கிரமிப்பு நடைபெறவில்லை என மக்களைத் திசை திருப்பியதற்கு மன்னிப்பு கோருவதன் மூலம் உண்டாக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.