முதல்முறையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியாவின் அங்கமாக காண்பித்த சீன தொலைக்காட்சி

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் அங்கமாக முதன் முதலாக சீனத்தொலைக்காட்சி  காண்பித்துள்ளது.

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் கணிசமான பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் எல்லையே  கட்டுப்பாட்டுப் பகுதியாக உள்ளது.

அதே நேரம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியை சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் அழைக்கிறது.

பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது. ஆகவே காஷ்மீர் பகுதியை பிரச்சினைக்குரிய பகுதி என்றே அந்நாட்டு வரைபடங்களில் குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால் முதன் முதலாக, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் அங்கமாக சீன தொலைக்காட்சி காண்பித்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரகம் செயல்படுகிறது. இங்கு கடந்த வாரம், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூன்று பயங்கரவாதிகள், இரண்டு பாதுகாப்பு படையினர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த சிஜிடிஎன் ‘டிவி’ சேனல், இந்த தாக்குதல் குறித்த செய்தியை நேற்று முன்தினம்(நவ.,26) ஒளிபரப்பியது.  அப்போது பாகிஸ்தான் வரைபடம் காட்டப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழு காஷ்மீரும் இந்தியாவுக்குள் இருப்பது போல காட்டப்பட்டது.

சீன தொலைக்காட்சியில் இதுபோல காண்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதனால் பாகிஸ்தான் அரசு  சீனா மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி