புதுடெல்லி: லடாக் பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் காந்தியைப் பாராட்டிய, சீன பத்திரிகையாளர் பெயரிலான டிவிட்டர் கணக்கு போலியான ஒன்று என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

“பிரதமர் எதற்காக மவுனமாக இருக்கிறார்?

அவர் ஏன் மறைந்து கொள்கிறார்?

போதும் போதும். என்ன நடந்தது என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

நமது வீரர்களைக் கொல்ல சீனாவுக்கு என்ன துணிச்சல்?

நம் நிலத்தை ஆக்ரமிக்க அவர்களுக்கு எவ்வளவு தைரியம்?”

மேற்கண்ட கேள்விகளை, மோடி அரசை நோக்கிக் கேட்டிருந்தார் ராகுல் காந்தி.

இந்நிலையில், இக்கேள்விகளைக் குறிப்பிட்டு, ராகுல் காந்தியைப் பாராட்டி, லீ ஜி என்ற பெயரில், சீன பத்திரிகையாளர் ஒருவர் பாராட்டுவதுபோல் டிவிட்டர் கணக்கு ஒன்று வெளியானது.

“நேர்மையான கேள்விகளை எழுப்பியதற்காக ராகுல் காந்திக்கு நன்றி. நீங்கள் அங்கே(இந்தியாவில்) இருக்கும்வரை, எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை” என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இதை பாரதீய ஜனதா ஆதரவாளரான விகாஸ் பாண்டே என்பவர் ரீடிவீட் செய்திருந்தார். அவருக்கு 1 லட்சத்திற்கும் மேலான followers இருக்கிறார்கள்.

இந்தப் பதிவு பலருக்கும் ஆச்சர்யத்தைக் கிளப்பிய நிலையில், இது ஒரு போலிக் கணக்கு என்பது பல்வேறு ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

ஏனெனில், சீன பத்திரிகையாளரின் டிவிட்டர் கணக்கில், சீன followers யாரும் இல்லை. பெரும்பாலும் இந்திய followers தான் உள்ளனர். அந்தக் கணக்கில் ஜுன் 17 வரை எந்தப் பதிவும் இடப்படவில்லை. அந்தக் கணக்கில் இடம்பெற்றுள்ள படம் சீனாவின் இளம்பருவ(குழந்தை) அதிமேதாவி ஹூவாங் இபோவினுடையது. இந்தப்படம், பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘த இன்டிபெண்டன்ட்’ என்ற பத்திரிகையில் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது.

இவ்வாறான பலவிதமான சான்றுகள் மற்றும் உண்மைகளால், இந்த டிவிட்டர் கணக்கு, ராகுல் காந்திக்கு எதிராக, பாரதீய ஜனதா ஆதரவு வலதுசாரிகளால் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெரியவந்துள்ளது.