பீஜிங்

சீனாவில் உள்ள ஒரு கிராம வாசிகள் யோகாவின் மூலம் தங்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.   யோகா என்பது இந்தியாவில் இருந்து உதயமானது என்பது நமக்கு பெருமை தரும் விஷயமாகும்.  இந்த யோகாவின் மூலம் பலர் உடல் ஆரோக்யம் அடைந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.   அதே நேரத்தில் சீனாவின் ஒரு கிராம மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளனர்.

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 300 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சிற்றூர் யுகவ்லியாங் ஆகும்.  இங்கு சுமார் 260  பேர் வசிக்கின்றனர்.   இவர்களின் முக்கிய பணி விவசாயம் ஆகும்.  இந்த சிற்றூரில் வாழும் இவர்களின் மக்கள் வாழ்வாதாரத்தை தேடி நகரங்களுக்கு சென்றுள்ளனர்.   அவர்கள் பெற்றோர்களை கவனிக்காததால் வறுமை இவர்களை வாட்டியது.

கடந்த 2016 முதல் உலகெங்கும் யோகா மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.  சீன அரசு அதிகாரியான லூ வென்சன் இவர்களுக்கு யோகா ஆசிரியராக இருந்துள்ளார்.  இங்கு விளையும் சீனாவின் சிறு தானியமான குவினோவாவில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.   இவற்றை யோகா செய்பவர்கள் உட்கொள்வது வழக்கமாகும்.

அதை ஒட்டி லூ இங்குள்ள விவசாயிகளுக்கு குவினோவா விற்பனைக்கான வழி முறைகளையும் சொல்லி கொடுத்துள்ளார்.   இதனால் இந்த விவசாயிகளுக்கு தங்கள் குவினோவா தானியத்தை நல்ல விலைக்கு விற்க முடிந்துள்ளது.  இதன் மூலம் பலர் வறுமைக் கோட்டுக்கு  மேல் வந்துள்ளனர்.  தற்போது இவர்களின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.