லக்னோ: பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பாரதீய ஜனதா தலைவரும் சாமியாருமான சின்மயானந்தாவை துறவிகள் சமூகத்திலிருந்து வெளியேற்ற அகில் பார்திய அகாரா பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் சின்மயானந்த் இனிவரும் காலங்களில் தன் பெயருக்கு முன்னால் சுவாமி அல்லது துறவி என்ற அடையாளத்தை இணைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அகில் பார்திய அகாரா பரிஷத் என்பது துறவிகளின் உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதனையடுத்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி, துறவிகள் சமூகத்திலிருந்து சின்மயானந்த்தை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த அமைப்பின் முறைப்படியான கூட்டம் வரும் அக்டோபர் 10ம் தேதி ஹரித்துவாரில் நடைபெறும் என்றும், அப்போது இந்த முடிவு குறித்து பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்படும். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, இதற்குமேல் எங்களின் சமூகத்திற்கு இழுக்கு வேறு எதுவும் தேவையில்லை.

அவர் நீதிமன்றத்தால் மன்னித்து விடுதலை செய்யப்படும்வரை வெளியேற்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது மகா நிர்வாணி அகாரா அமைப்பில் மகாமண்டலேஷ்வர் என்ற ஸ்தானத்தில் உள்ளார்.

எனவே, இப்பிரச்சினையை அடுத்து, மேற்கண்ட பதவியையும் இழப்பார் 73 வயதாகும் சின்மயானந்த்.