வைரமுத்து மீது காவல்துறையில் புகார் அளிப்பேன்!:  சின்மயி அதிரடி பேட்டி

வைரமுத்து மீது காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் மீ டூ என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்து வருகிறது. இந்த பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல்கள் குறித்து ஹேஷ்டேக் மூலம், சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் பாலிவுட்டில் பல பிரபல நட்சத்திரங்கள் மீது இந்த வகையில் புகார் கூறப்பட்டது. தமிழகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, கர்நாடக இசைக்கலைஞர்கள் டி.என். சேஷகோபாலன், ரவி கிரண், சசிகிரண், பிராமணர் சங்க தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் மீது சின்மயி உள்ளிட்டவர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் திரைப்பாடகி சின்மயிதான்  பலர் மீதும் குற்றம்சாட்டி பரபர்ப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும், வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இந்தநிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “காவல்துறையை நாடாதது ஏன்”என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு அவருடன் பேட்டி அளிக்க வந்திருந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். கேள்வி கேட்ட செய்தியாளரை தனியே வரச் சொன்னார். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு மேலும் சில செய்தியாளர்கள் இதே கேள்வியை எழுப்ப.. சின்மயி கையெடுத்துக் கும்பிட்டு அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் இணைய இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சின்மயி, “வைரமுத்து மீது காவல்துறையில் புகார் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது:

“வைரமுத்து மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் விரைவில் புகார் அளிக்க இருக்கிறேன்.  நான்மட்டுமல்ல என் போலவே மூன்று  பெண்கள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  அவர்களும் வைரமுத்து மீது புகார் அளிக்க இருக்கிறார்கள்.

இது நூறு சதம் உறுதி.  நிச்யமாக வைரமுத்து மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும்” என்று சின்மயி தெரிவித்துள்ளார்.