வைரமுத்து மீது குற்றம்சாட்டுவதை சின்மயி நிறுத்த வேண்டும்!: சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆவேசம்

திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றம்சாட்டுவதை பாடகி சின்மயி நிறுத்த வேண்டும் என்று சுவிஸ் நாட்டின் கலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியான தொல்லையை அனுபவித்த பெண்கள் ட்விட்டரில் “மீ டூ” என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிர்ந்துவருகிறார்கள்.

இந்த நிலையில், பிரபல பாடகி சின்மயி, “நிகழ்ச்சி ஒன்றில் பாட சுவிட்சர்லாந்துக்கு என் தாயாருடன் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு வைரமுத்துவும் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்னை மட்டும் வைரமுத்துவின் அறைக்குச் செல்லச்சொன்னார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நானும் தாயாரும் நாடு வந்து சேர்ந்தோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை சின்மயியின் தாயார் பத்மாசினியும் ஆமோதித்திருக்கிறார்.

இதற்கு வைரமுத்து, “பிரபலமானவர்கள் மீது அவதூறை வீசுவது வழக்கமாகிவிட்டது. காலம் பதில் சொல்லும்” என்று பதில் அளித்திருக்கிறார்.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சின்மயி, வைரமுத்துவை, “பொய்யர்” என்று விமர்சித்திருக்கிறார்.

இந்த நிலையில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் என்பவர், “சின்மயி குறிப்பிடும் அந்த நிகழ்ச்சி 2004ம் வருடம் சுவிஸ் நாட்டில் நடந்தது. அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது நான்தான். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சின்மயி, தன் தாயாருடன் என் வீட்டில்தான் தங்கினார். அவர் கூறியது போல எதுவும் நடக்கவில்லை.

அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும் அவர் மீது உலகத்தமிழர்கள் உலகத்தமிழர்கள் கோபத்தில் உள்ளனர்” என்று சுரேஷ் தெரிவித்துள்ளார்.