2017-ம் ஆண்டு ஹாலிவுட்டில், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பெண் கலைஞர்கள் மீடூ என்கிற இயக்கத்தின் பெயரில் வெளியே சொல்ல ஆரம்பித்தனர்.

இன்று வரை திரைத்துறையைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியிலான கொடுமைகள் குறித்து மீடூ இயக்கத்தின் உதவியோடு பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சக்திமான் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் பற்றிப் பேசுகையில், “பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீடு பிரச்சினை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்கிற ரீதியில் கருத்துக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு இணையத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

அந்தவகையில் பாடகி சின்மயி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கியதால் தான் மீடு போன்ற பிரச்சினைகள் எழுவதாக முகேஷ் கண்ணா கூறியுள்ளார். ஆண்கள் தங்கள் கைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் இல்லையாம். சரி அங்கிள், உண்மையை சொல்லவேண்டுமென்றால் இது போன்ற மனநிலை கொண்டவர்களால் எனக்கு சோர்வே ஏற்படுகிறது. அவர்கள் மாறப் போவதில்லை. கற்றுக் கொள்ளப் போவதுமில்லை. தங்களுடைய நச்சுக்கருத்துகளை தங்களுக்குள்ளும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. தலையெழுத்து என பதிவிட்டுள்ளார் .