மெர்சலை மேலும் மெர்சலாக்கும் பாடகி சின்மயி : எச். ராஜவுக்கு டிவீட்

சென்னை

நடிகர் விஜயின் வாக்காளர் அட்டையை வெளியிட்ட எச் ராஜாவுக்கு சின்மயி டிவிட்டரில் பதில் கொடுத்துள்ளார்

நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள “மெர்சல்” தமிழ்த் திரைப்படம் மேலும் மேலும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.   ஜி எஸ் டி மற்றும் ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை பற்றிய வசனங்களுக்கு பா ஜ க எதிர்ப்பு தெரிவித்தது.   அதை பலர் எதிர்த்தனர்.   அகில இந்திய அளவில் இந்த மெர்சல் பற்றிய கருத்துக்கள் பரவி வருகின்றன.

தமிழக பா ஜ தலைவர்களில் ஒருவரான எச் ராஜா இந்தப் படத்தில் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் எனச் சொன்னது பொய் எனவும் இதெல்லாம் ஜோசஃப் விஜயின் மோடி மீதான வெறுப்பை காட்டுகிறது என டிவிட்டரில் பதிந்தார்.  அதைப் பலரும் எதிர்த்தனர்.   குறிப்பாக இவ்வளவு நாள் விஜய் எனக் கூறி விட்டு இப்போது அவருடைய முழுப் பெயரான ஜோசஃப் விஜய் என சொல்வதை கண்டித்தனர்.

அதைக் கண்டுக் கொள்ளாத எச்.  ராஜா உண்மை கசப்பானது என்னும் தலைப்பில் விஜய்யின் வாக்காளர் அட்டையையும், அவருடைய லெட்டர் ஹெட் ஆகியவற்றை வெளியிட்டார்.   இது மேலும் அவருடைய ரசிகர்களை தூண்டி விட பலரும் அவருக்கு அவருடைய பஹ்டிவில் கடுமையாக பதில் அளிக்கின்றனர்.   இந்த டிவீட் பல திரையுலகப் பிரமுகர்களையும் ஆத்திரமூட்டி உள்ளது.

பிரபல திரைப்பட பாடகி சின்மயி,தனது டிவிட்டர் பக்கத்தில் எச் ராஜாவை டாக் செய்து ஒரு பதிவிட்டுள்ளார்.  அந்தப் பதிவில் “எது கசக்கிறது?  தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவர் அனுமதியின்றி பகிர்வது சட்டபூர்வமான செய்கையா?   இதே போல நாளை ஆதார் அட்டை விவரங்களை வெளியிடுவார்களா?” என கேட்டுள்ளார்.   இதற்கும் பின்னூட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன.

சின்மயியின் டிவீட்டுகள் எப்போதுமே சர்ச்சையை உருவாக்கும்.   அவர் முன்பு இலங்கை மீனவர்களைப் பற்றி எழுதிய ஒரு பதிலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து அவர் எதிர்ப்பாளர்களைக் குறித்து காவல் அதிகாரியிடம் புகார் கொடுத்தது தெரிந்ததே.