பாட்னா :

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, சட்டப்பேரவை தேர்தலின் போது அந்த அணியில் இருந்து வெளியேறியது.

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக, லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தினார், அதன் தலைவர், சிராக் பஸ்வான். இதனால் ஐக்கிய ஜனதா தளம், இந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றது.

110 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க, 74 இடங்களில் வென்ற நிலையில், 115 தொகுதிகளில் போட்டியிட்ட, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. 30 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைய காரணமாக இருந்தார், சிராக் பஸ்வான்.

இந்த நிலையில், மீண்டும் பீகார் முதல் –அமைச்சராக நிதீஷ்குமார் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு சிராக் பஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

“நிதீஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். முழு பதவிக்காலமும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக நீடிப்பீர்கள் என நம்புகிறேன்” என வாழ்த்து செய்தியில் சிராக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “நிதீஷ்குமாரை முதல்-அமைச்சராக்கிய பா.ஜ.க.வுக்கும் வாழ்த்துகள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் சிராக் குறிப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி