கடைசி போட்டியில் சதம் அடித்து ஓய்வுப்பெற்ற கிறிஸ்கெயில் – சக வீரர்கள் பேட்டை உயர்த்தி மரியாதை

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்கெயில் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தனது கடைசி முதல் தரப் போட்டியில் கிறிஸ்கெயில் சதமடித்து அசத்தியுள்ளார்.

chris

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் கிறிஸ் கெயில். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வித போட்டிகளிலும் மேற்கிந்திய அணிக்காக பங்கேற்ற கிறிஸ்கெயில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் கிறிஸ்கெயில்

தற்போது உள்ளூர் போட்டிகளில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்கெயில் முதல் தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கிறிஸ்கெயில் பார்படாஸ் அணிக்கு எதிராக தனது கடைசி போட்டியை விளையாடினார்.

இந்த போட்டியில் அதிரடி காட்டிய கெயில், 114 பந்துகளில் 122 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமின்றி, தனது அணிக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார். கடைசிப் போட்டியில் சதமடித்து கலக்கிய கெயில் பேட்டிங் செய்ய வந்தபோது, சக வீரர்கள் பேட்டை உயர்த்தி மரியாதை செலுத்தினர். கிறிஸ்கெயில் கடைசியாக விளையாடிய இந்த போட்டியில் அவரை கௌரவிக்கும் விதமாக கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதுவரை 356 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில் 12,436 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.