மும்பை: டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்க‍ை, கடைசிநேர அதிரடியின் மூலம் எட்டி, ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ராஜஸ்தான் அணி.

ராஜஸ்தான் அணியின் டேவிட் மில்லர் 43 பந்துகளில், 2 சிக்ஸர் & 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களை அடித்து அணிக்கு பெரும் துணை புரிந்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்தவுடன் நிலைமை சிக்கலானது.

ராகுல் டெவாஷியா 17 பந்துகளில் 19 ரன்களை அடித்தார். ஆனாலும், கடைசிநேரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ராஜஸ்தான் வெல்லுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், களத்தில் நின்ற கிறிஸ் மோரிஸ் வேறு திட்டம் வைத்திருந்தார். அவர் எளிதில் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. இவர், தன் பங்கிற்கு 4 சிக்ஸர்களை வெளுத்து வெற்றியை உறுதிசெய்தார். கடைசி கட்டத்தில், 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், 1 சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.

இதன்மூலம், 19.4 ஓவர்களிலேயே, 150 ரன்களை எடுத்து, 3 விக்கெட்டுகளில் வென்றது ராஜஸ்தான் அணி.