மாணவிகளுக்கு கிறித்துவக் கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பற்றது : சென்னை உயர்நீதிமன்றம்

 

சென்னை

பெண் குழந்தைகளுக்குக் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பற்றதாக பெற்றோர்கள் கருதுவதாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் விலங்கியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 34 பேர் அந்தக் கல்லூரி பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். பேராசிரியர் சாமுவேலுடன் மாணவிகள் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்குக் கல்லூரிச் சுற்றுலா சென்றுள்ள சமயத்தில் தான் பேராசிரியர் தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக மாணவிகள் கல்லூரி  நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதையொட்டி அடுத்த 3 ஆண்டுகளுக்கு வினாத்தாள்களைத் தயாரிக்க  மற்றும் விடைத்தாள்களைத் திருத்த சாமுவேலுக்குத் தடை விதித்து கல்லூரி நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை எடுத்தது.. அத்துடன் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு பேராசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. தனது பணி நீக்க நோட்டீசை ரத்து செய்யக்கோரி, பேராசிரியர் சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

நேற்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. நேற்று மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி வைத்திய நாதன் தீர்ப்பளித்தார். தீர்ப்பில். ”மனுதாரர் சாமுவேலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்குழு எல்லையை மீறி விசாரிப்பதாக மனுதாரர் கூறுகிறார். அது தவறானதாகும். விசாரணை சரியான முறைப்படியே நடைபெறுகிறது. மேலும் விசாரணைக்குழுவின் அறிக்கையில் மனுதாரர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கல்லூரியின் பணி நீக்க நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது

நீதிபதி வைத்தியநாதன், “இப்போது உள்ள காலகட்டத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது ஏதாவது ஒரு புகார் வந்துகொண்டே இருக்கிறது. சிறந்த கல்வியைக் கிறிஸ்தவ நிறுவனங்கள் வழங்கினாலும், அறநெறியைப் போதிக்கிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. இது பெண்களுக்கு  எதிரான நடவடிக்கைகளுக்குத் தண்டனை வழங்கும் சட்டங்கள் மீது அரசு கவனம் செலுத்தச் சரியான நேரம் ஆகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களைத் தடுக்கும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்.

ஒரு சில சட்டங்கள் பெண்கள் எளிதாக அணுகும் வகையில் உள்ளது. அத்துடன் அப்பாவி ஆண்மகனைச் சிக்க வைக்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் நிறைய இருக்கின்றன. அதைப் போல் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் போலியான பல வழக்குகள் உள்ளன. எனவே, பெண்கள் எளிதில் அணுகும் வகையிலும், துஷ்பிரயோகம் செய்ய முடியாத வகையிலும் சட்ட விதிமுறைகளில் அரசு போதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.