கிறிஸ்தவ சிறுபான்மையினர் பாஜகவில் நீடிக்க முடியாது!: பா.ஜ.க. மாநில நிர்வாகி விலகல்

சென்னை,

சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வில் நீடிக்க முடியாது என்று தெரிவித்துள்ள, அக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளருமான ஜெமிலா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இரு நாட்களுக்கு முன்பே, ஜெமிலா தனது முகநூல் பக்கத்தில், “மெர்சல்” படத்தில் நடித்த விஜய்யை மத ரீதியாக பா.ஜ.க.வினர் விமர்சிப்பதற்கு மறைமுகமாக அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

அந்த பதிவில், “சினிமா வசனம் பேசும் நடிகனை , நடிகராக மட்டுமே பார்க்காமல் , சினிமாவை ஒரு கலையாக மட்டுமே பாராமல் , தொடர்ந்து அந்த நடிகனை விமர்சனம் செய்வது… தேவையில்லாமல் ஒரு கலைஞனை அரசியல்வாதி ஆக்குவது இங்கு இருக்கும் அரசியல்வாதிகளே…. இதெல்லாம் தேவையா??” என்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில், விஜய் பற்றி தொடர்ந்து “ஜோசப் விஜய்” என்ற பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்துவந்தனர். மெர்சல் படத்தில் பாஜகவினர் எதிர்த்த காட்சிகள் நீக்கப்படும் என்ற அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தார்.

இந்த நிலையில் ஜெமிலா, “பாஜகவில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் நீடிக்க முடியாது” என்று தெரிவித்து, தான் கட்சி பொறுப்புகளில் மட்டுமின்றி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

“நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன் . பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜகவின் கொள்கைகள் எழுத்தளவிலும், செயல்களில் மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உள்ளது.

என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன். எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று ஜெமிலா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed