கேரளா: 4 ஆண்டுகளாக பலாத்காரம்!:  கிறிஸ்துவ பேராயர் மீது  கன்னியாஸ்திரி புகார்!

கத்தோலிக்க பேராயர் மீது கன்னியாஸ்திரி பாலியல் புகார் சுமத்தியுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரோமன் கத்தோலிக் ஜலந்தர் மறைமாவட்ட பேராயராக உள்ளவர் பிராங்கோ முலக்கல் (வயது 54). இந்த மறைமாவட்ட நிர்வாகத்தில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள குரவிலாங்காட்டில் கான்வென்ட் பள்ளி  ஒன்று செயல்படுகிறது. . இதை மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் நிர்வகித்து வந்தார்.

இந்த நிலையில், பேராயர் பிராங்கோ முலக்கல் தன்னை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

2014ம் வருடம் பேராயர் பிராங்கோ முலக்கல் என்னை, கோட்டயம் மாவட்டம் குரவில்லங்காடு பகுதியிலுள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் வைத்து பலாத்காரம் செய்தார். இதன்பிறகு என்னை பல்வேறு சந்தர்ப்பங்களில் 13 முறை மிரட்டி பலாத்காரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது புகாரில் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 

 

பேராயரின் செயல்பாடு பற்றி ஏற்கனவே கார்டினலிடம் கன்னியாஸ்திரி புகார் அளித்ததாகவும், ஆனால், அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை என்பதால் போலீஸ் துணையை கன்னியாஸ்திரி நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  இதற்கிடையே பேராயர் பிராங்கோ முலக்கலும், கன்னியாஸ்திரி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகாரில், கன்னியாஸ்திரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும், பணியிடமாற்றம் செய்ததாகவும், அதனால் அவர் தன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோட்டயம் போலீஸ் எஸ்.பி. ஹரிசங்கர்,  “பேராயரிடமிருந்து முதலில் புகார் வந்தது. இதன்பிறகு கன்னியாஸ்திரியிடமிருந்து புகார் பெறப்பட்டது. இரு புகார்களையும் விசாரித்து வருகிறோம்” என்றார். பேராயர் புகார் அளித்த 2 நாட்கள் பிறகு கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். கன்னியாஸ்திரி புகார் அளிக்கப்போவதாக கூறியதும் பேராயர் தரப்பு முந்தியதாக கன்னியாஸ்திரி தரப்பு குற்றம்சாட்டுகிறது.

இதுகுறித்து கன்னியாஸ்திரி, “இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பேராயருக்கு எதிராக சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க எனது முயற்சிகளை தொடருவேன்” என்றார். கேரளாவில், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற 2 குழந்தைகளின் தாயாரை ஐந்து பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்த புகார், சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரியே புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பாதிரியார்கள் தொடர்பான பாலியல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதை புள்ளி விவரங்கள் எடுத்துக்கூறுகின்றன. ஆனால் தேவாலய நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விஷயம் சமாதானப்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Christian nun complaint against kerala bishop as he raped her for 4 years, கேரளா: 4 ஆண்டுகளாக பலாத்காரம்!  கிறிஸ்துவ பேராயர் மீது  கன்னியாஸ்திரி புகார்!
-=-