சேலம்:

நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகவும், மதுரையில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், சேலத்தில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டம் குறித்து பேசிய கிறிஸ்தவ அமைப்பினர்,  ஓட்டு வங்கிக்காக பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் மேற்கொள்கிறார்கள் என்றும்,  கடவுளின் பெயரால் வீதி வீதியாக சமயக் கலவரங்கள் தூண்டி விடுபவர்களை  இனம் கண்டறிவோம் என்றும்,  கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் , சமயத்தின் பெயரால் கிறிஸ்துவ ஆலயங்களும் கல்வி நிறுவனங்கள் தகர்க்கப்படுவதை எதிர்த்தும் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மதுரை கூடல் புதூரில் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை எரித்ததை கண்டித்தும், பாஸ்டர்கள் தொடர்ந்து  தாக்கப்பட்டதை கண்டித்தும், சமூகத்தில் அமைதி சூழலை உருவாக்கிட  சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு அடையாள  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

கடந்த மாதம் 16ந்தேதி மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள கிறிஸ்தவ வழிபட்டு தலம் மீது இந்துதுவா சக்திகள் தாக்குதல் நடத்தி 30 பைபிள்களை தீயிட்டுக் கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.