சென்னை:

கிறிஸ்துமஸ் கொண்டாடத்தையொட்டி, நள்ளிரவு பைக் ரேஸில் ஈடுபட்ட 160 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நள்ளிரவில் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைக்காக குவிவது வழக்கம். இதன் காரணமாக நேற்று இரவு முக்கிய சாலைகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு மெரினா கடற்கரை காமராசர் சாலையில் சிலர் கடுமையான வேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ரேஸ் வைத்து ஓட்டிச்சென்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதே போல் ராயபுரம் கல்மண்டபம் அருகே மோட்டார் சைக்கிள் ரேஸ் ஓட்டிய 5 பேரை போலீசார் பிடித்தனர்.  அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் ஓட்டிய இளைஞர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

இவ்வாறு ஒரே நாளில் மொத்தம் 160 பேரை காவல்துறையினர் பிடித்து,  அவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இதில் 126 நபர்கள் மீது ஐபிசி பிரிவு 336 (அடுத்தவர் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் வண்ணம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டுவது) மற்றும் 114 (தண்டனைக்குரிய குற்றத்தை செய்பவருடன் உடனிருந்து தானும் அதே செயலுக்கு துணையிருத்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பல இளைஞர்களின் பெற்றோர் காவல்நிலையம் வந்து, இனிமேல் இதுபோல செயல்களில் தங்களது மகன் ஈடுபடமாட்டார் என்று உறுதிமொழி எழுதிக்கொடுத்து, வாகனங்களை மீட்டுச் சென்றனர்.