கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை

சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை இன்று நள்ளிரவு முதல் நடக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தேவாலயங்களில் இன்று நள்ளிரவு முதல் சிறப்பு ஆராதனை நடைபெற இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றை கருத்தில்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆராதனை நடக்க உள்ளது.

இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாட உள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகள் சற்று களையிழந்து உள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அந்தவகையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் தேவாலயம் உள்பட பல தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. இதேபோல் அனைத்து ஆலயங்களிலும் வைக்கப்பட்டுள்ள உயரமான கிறிஸ்துமஸ் மரங்களும் மின் விளக்குகள் பளிச்சிட கண்ணைக் கவருகின்றன.

ஒவ்வொரு ஆலயத்திலும் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதலே ஆராதனை தொடங்க இருக்கிறது. சாந்தோம் தேவாலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆராதனை நடக்கிறது. இதனை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நடத்துகிறார். அதன் தொடர்ச்சியாக நாளை காலை 6 மணி, 7.30 மணி, 10 மணி மற்றும் 11.30 மணிக்கும் ஆராதனை நடக்க இருக்கிறது.

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆராதனை நடக்கிறது. நுங்கம்பாக்கம் சி.எஸ்.ஐ. கதீட்ரல் தேவாலயத்தில் நாளை காலை 6.30 மணி, 7.30 மணி, 9 மணி என 3 நேரங்களில் ஆராதனை நடைபெற உள்ளது. இந்த ஆராதனையை ஆலயத்தின் தலைமைப் பாதிரியார் லாரன்ஸ் ஜெபதாஸ் நடத்துகிறார். இதில் காலை 7.30 மணிக்கு நடைபெறும் ஆராதனையில் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கலந்துகொண்டு அருளுரையாற்றுகிறார்.

கொரோனா நோய்த்தொற்றை கருத்தில்கொண்டு தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை நடைபெற இருக்கிறது. அந்தவகையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் இன்று நள்ளிரவு நடைபெற உள்ள சிறப்பு ஆராதனையில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு டோக்கனும் வழங்கப்பட்டுவிட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கதீட்ரல் தேவாலயத்தில் 3 நேரங்களில் நடைபெறும் ஆராதனைகளில், ஒவ்வொரு ஆராதனையிலும் தலா 100 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோல் பல தேவாலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆலயத்தில் சிறப்பு ஆராதனையில் கலந்துகொண்டு வீடு திரும்பும் கிறிஸ்தவர்கள், தங்கள் அருகில் உள்ள குடும்பத்தினருடன் இனிப்புகளை பகிர்ந்துகொண்டு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவார்கள்.