டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை:

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதை தொடர்ந்து அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இத குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘உன்னைப்போல பிறரையும் நேசி என்கிற உயர்ந்த தத்துவத்தை போ‌தித்து, சகோதரத்துவத்தையும், அன்பையும் எடுத்துரைத்த தேவகுமாரனாம் இயேசு கிறிஸ்து அவதரித்த பொன்னாளாம் கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் தமது இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமக்கொரு பாலகன் பிறந்தார், நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்கிற வேத வாக்கியத்தை தேவன் நிறைவேற்றிய காலம் கிறிஸ்துமஸ் காலம் அன்பை, எளிமையை மன்னிக்கும் குணத்‌தை, ஈகையை, இதயத் தூய்மையை, இறைவன் மீது நாம் கொள்ளவேண்‌டிய விசுவாசத்தை, பிரசங்கித்த இயேசுநாதரை எல்லோரும் போற்றிடுவோம்

ஏழைகளுக்கு கிறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்கிற இயேசு கிறிஸ்துவின் வாக்கியத்தின்படி, ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை தங்கள் குணமாகவே கொண்ட எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கிறிஸ்தவத்தின் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும், எப்போதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர் என்பதை எண்ணிப்பார்ப்பதாகவும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்து செய்தியில், ‘‘அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இ‍‍யேசுபிரான் போதித்த போதனைகளை இதயத்தில் தாங்கிய கிறிஸ்தவ மக்கள், தூய தொண்‌டினை மக்களுக்கு ஆற்றும் வ‌கையில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகத்திலும் அவர்களின் பணி என்றும் போற்றத்தக்கது.

தொடர்ந்து இந்த அன்பின் நற்செய்தியும், நற்செயலும், தங்கு தடையின்றி தமிழகத்தில் தழைத்து ஓங்கிட எப்போதும் நாம் துணை நின்றிடுவோம். நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கிலும், வாழும் என் அன்பு கிறிஸ்தவ சகோதரர்களுக்கு, மீண்டும் ஒருமுறை இதயம் கணிந்த நல்வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.